தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 28, 2023, 8:32 PM IST

ETV Bharat / state

கொடை விழாவில் டன் கணக்கில் அசைவ விருந்து... ஆசையாய் உண்டு மகிழ்ந்த பக்தர்கள்...!

திருச்செந்தூரில் உள்ள "அருள்மிகு ஸ்ரீ சுடலை மாடசாமி" திருக்கோயில் கொடை விழாவில் 1500 கிலோ இறைச்சி, 2,500 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட சோறு என வெகுவிமரிசையாக அன்னதானம் நடந்தது.

Etv Bharat
Etv Bharat

அருள்மிகு ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோயில் கொடை விழா

தூத்துக்குடி: ஒன்றரை டன் கிடாக்கறி, இரண்டரை டன் அரிசி இது கோயில் கொடைக்கு குவியல் குவியலாக தயாராகும் விருந்திற்கான மூலப்பொருட்கள். வெட்டி, வெட்டி மலையாக குவிந்து கிடக்கும் கிடாக்கறி, அள்ள அள்ள குறையாததாக குவித்து வைக்கப்பட்டிருக்கும் சோறு. இதெல்லாம் கோயில் கொடைக்காக தயாரான விருந்தின் ஒரு பகுதி.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் என்றாலே முருகன் கோயில் தான் நம் அனைவரின் நினைவிற்கும் வரும். ஆனால், முருகன் கோயிலுக்கு அடுத்த படியாக பெரிய விழாவாக திருச்செந்தூரில் கொண்டாடப்படுவது திருச்செந்தூர் மேலத்தெருவில் உள்ள "அருள்மிகு ஸ்ரீ சுடலை மாடசாமி" திருக்கோயில் கொடை விழா தான்.

ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் இந்த கோயில் கொடை விழா ஜூலை 25ம் தேதி முதலே கொண்டாட்டங்கள் களைகட்டின. பல்வேறு வகையான மேளதாளங்கள் முழங்க கொடை விழா அதகளப்பட்டது. உச்சிகால பூஜை, சாமக்கொடை என கழிந்து அடுத்த நாள் (ஜூலை 26) அதிகாலையில் படைப்புத் தீபாராதனை நடைபெற்றது.

சுடலை மாடனுக்கு பிரமாண்ட கறிவிருந்துடன் படையலிட்டு, பிரசாதமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கிய சுமார் 150 ஆடுகளை பலியிட்டு 1500 கிலோ இறைச்சி, 2,500 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட சோறு என வெகுவிமரிசையாக அன்னதானம் நடந்தது.

இந்த அன்னதானத்தில் சாதி, மத பேதமின்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விருந்தை உண்டு மகிழ்ந்தனர். சுடலை வழிபாடு என்பது தென் தமிழ்நாட்டின் கிராம வாழ்வியலின் ஒரு பகுதி. மதுரைக்கு தெற்கே சுடலை கோவில் இல்லாத கிராமங்களே இல்லை என்று கூறலாம்.

மயானக்கரை காவல் தெய்வமாக கருதப்படும் சுடலை, மாயாண்டி, ஒளிமுத்து, முண்டசாமி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். தென் மாவட்டங்களிலிருந்து வெளியூர்களில் வேலை செய்வோருக்கு தீபாவளி, பொங்கல் கூட பெரிய பண்டிகை கிடையாது, கோயில் கொடை தான் இவர்களை பிறந்த ஊர் நோக்கி ஈர்க்கும் மாபெரும் திருவிழாவாக உள்ளது.

இதையும் படிங்க:ஆடி வெள்ளி; திருவண்ணாமலை ஸ்ரீ பச்சையம்மன் கோயிலில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details