தூத்துக்குடி: மீன்பிடி தடைக்காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று திரும்பிய நிலையில், எதிர்பார்த்த மீன்வரத்து கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் முதல் சென்னை வரையிலான அனைத்து கடலோர மாவட்டங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் மீன்பிடி தடை காலம் விதிக்கப்பட்டதை அடுத்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில் ஆழ்கடலில் மீன்பிடிப்பிற்கான தடை நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன்.16) அதிகாலை ஐந்து மணிக்கு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சார்ந்த சுமார் 120 விசைப்படகுகள் மீன்பிடிப்பிற்கு ஆழ்கடலுக்குச் சென்றன.
மீனவர்கள் மகிழ்ச்சி
61 நாள்கள் தடைக்காலம் முடிந்து, இன்று மீன்பிடிக்கச் சென்ற நிலையில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீன் வியாபாரிகள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் காலை முதலே குவியத் தொடங்கினர். காலை 8 மணி முதல் மீன்பிடிப்பிற்கு சென்ற விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில், மீன்வரத்து எதிர்பார்த்த அளவு கிடைத்துள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.