தூத்துக்குடி:தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழா மற்றும் மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் இருக்கக்கூடிய வியாபாரிகள் சங்கங்கள், திமுக சங்கம். அவர்கள் இந்து வியாபாரிகளின் பிரச்னைகள் பற்றி கவலைப்படுவது கிடையாது. எனவே, இந்து வியாபாரிகள் பிரச்னையைத் தீர்த்து வைப்பதற்காக இந்த சங்கம் துவக்கி வைக்கப்பட்டு, இதுவரை 6 ஆயிரம் சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இலக்கு அதை 10 மடங்காக்கி அடுத்த ஆண்டு 60 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட ஒரு சங்கமாக இருக்கும். ஒரு காலகட்டத்தில் இந்து வியாபாரிகள் சங்கம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு ஆங்கில நாளிதழில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் உண்மை நிலையை உடைத்துப் பேசி இருக்கின்ற காரணத்தினால் இங்கு சில நரிகள் ஊளையிடுகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியும், 1965ல் அண்ணாதுரை தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்து 34 ஆண்டுகளாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், 1971 ஆகஸ்ட் 31ஆம் தேதி சாராயக்கடைகளை திறந்துவிட்டு மது என்றால் என்னவென்று அறியாத தமிழ் சமுதாயத்தை குடிகாரனாக்கி இளைஞர்களை சீரழித்தது தான் திராவிட மாடல், கருணாநிதியின் குடும்பம்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரி இல்லை. பட்டப்பகலில் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழக ஆளுநர் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பதை அறிக்கையாக அளித்தார் என்றால் இந்த அரசாங்கம் இருக்காது. தமிழக ஆளுநரை ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களை வைத்து சீண்டும் வேலைகளை விட்டுவிட்டு ஒரு மேம்பட்ட அளவில் மு.க.ஸ்டாலின் ஆட்சியை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் இந்து கோயில்கள் மிகச் சிறப்பாக பராமரிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். 50,000 ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதற்கான ஆதாரம் உள்ளதாக கவர்னர் கூறுகிறார். தமிழக அரசு மூவாயிரம் ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக பொய் சொல்கிறது. இந்த விஷயங்களை ஆளுநர் திறந்த மனதோடு சொல்லியிருக்கிறார்.