தூத்துக்குடி:பிரதமர் நரேந்திர மோடி, திருநெல்வேலி ரயில் நிலையத்தில், நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை இன்று (செப். 24) காணொலி காட்சி வாயிலாக காலை 11:30 மணியளவில் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.
விமர்சிப்பதே வேலை: அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "நாடு வேகமாக முன்னேறுகிறது. அதைப் பற்றி தவறு சொல்ல வேண்டும் என்பதற்காக மோடி ஒன்பது ஆண்டுகாலம் எதையுமே செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடுமையான குடிநீர் பஞ்சம் தென் பகுதியில் ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் தொகுதியில் மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பதாகக் கேள்விபட்டேன்.
வீடு தோறும் குடிநீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மோடி கொண்டு வந்து இருக்கிறார். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்த வேண்டும்" என்றார். அமைச்சர் கீதாஜீவன் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வரும்.. ஆனால் வராது என்று கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "33% மகளிர் இட ஒதுக்கீடு எங்களை பொறுத்த அளவிற்க வரும்.
இடஒதுக்கீடு 2029ல் வரும்:அவர்களை பொறுத்த அளவிற்கு வராது. அவர்கள் நெகட்டிவாக யோசிக்கிறார்கள். முன்னர் கூட்டணி ஆட்சியில் அதிக பெரும்பான்மையாக இருந்தார்கள். ஆனால் கொண்டு வர முடியவில்லை. தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் கொண்டு வரப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுத்து 2028 அல்லது 29ல் வரும். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அவர்கள் இப்படி பேச கூடாது. 33% இட ஒதுக்கீட்டு மூலம் பல பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.