தூத்துக்குடிஅருகே விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர், விஜயகுமார், வயது(24). இவர் அப்பகுதியில் டாக்ஸி டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் குற்றாலம் சென்றிருந்தார். அப்போது, கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த ஹரிணி என்ற குழந்தை தனது குடும்பத்தினருடன் அருவியில் குளித்தபோது தண்ணீரில் தவறி விழுந்து பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது.
சம்பவத்தைப் பார்த்த விஜயகுமார் உடனடியாக செங்குத்தான பள்ளத்தாக்கில் குதித்து, பலத்த நீரோட்டத்தில் தத்தளித்த குழந்தையை தூக்கி சில நிமிடங்களில் பாதுகாப்பாக அழைத்து வந்தார். விஜயகுமாரின் துணிச்சலான முயற்சியை சம்பவ இடத்தில் இருந்தவர்கள் பாராட்டினர். இவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் விஜயகுமாரை, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கவுரவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.