தூத்துக்குடி:தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில், வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கிரெடிட் கார்டு, டைம் டெபாசிட் மற்றும் மக்களுக்கு கொடுக்கப்படும் வட்டிகளில் குறைபாடுடன் கணக்கு காட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு மற்றும் வருமானவரித் துறைக்கு முறையாக கணக்கு காட்டப்படாத காரணத்தினால் இந்த சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் பொதுமக்கள் முதலீடு தொடர்புடைய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிதி பரிவர்த்தனை அறிக்கையை வருமானவரித்துறைக்கு சமர்ப்பித்து வருகிறது. இந்த நிதி பரிவர்த்தனை அறிக்கை முறையாக காட்டப்படுகிறதா என்பது குறித்து அவ்வப்போது வருமானவரித்துறை கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் பொது மக்களின் தனிநபர் வருமான வரி அறிக்கையை ஒப்பிட்டு பார்த்து, முறையாக கணக்கு காட்டுகிறதா என கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் இந்த நிறுவனங்களில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொள்வதற்கு வருமான வரித்துறைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே அறந்தாங்கியில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் வருமானவரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி 13.5 கோடி ரூபாய் அளவில் முறையாக கணக்கு காட்ட வில்லை என கண்டுபிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளரான ஆதி மோகன் தலைவராக செயல்படும் கூட்டுறவு வங்கியில் இந்த சோதனையை வருமானவரித்துறை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக தற்போது தூத்துக்குடியை தலைமையகமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வருமானவரித்துறை உயரதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
1921 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு, இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் கடந்த ஐந்து வருடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்ய போது பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும் முறையாக கணக்கு காட்டப்படவில்லை எனவும் தெரியவந்தது.