தூத்துக்குடியில் தங்குகடல் மீன்பிடிப்புக்கு அனுமதிகேட்டு கடந்த மார்ச் 5ஆம் தேதி முதல் கடலுக்குச் செல்லாமல் விசைப்படகு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வந்ததால், கரோனா ஊரடங்கினால் விசைப்படகு மீனவர்கள் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, விசைப்படகு மீனவர்கள் வாழ்வாதாரம் காப்பதற்காக மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் கோரிக்கையை பரிசீலித்த அரசு, ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடை காலத்தை மே 31ஆம் தேதி வரை குறைத்து உத்தரவிட்டுள்ளது. விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என்ற உத்தரவையும் வழங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக அரசு வகுத்துள்ள வழிமுறைகள் பற்றி எடுத்துரைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மாவட்ட உதவி ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன் தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு உரிமையாளர்கள் சங்கங்கள், மீன்பிடி மீன்வளத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும், மீன்வளத் துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டம் குறித்து உதவி ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன் கூறுகையில், “தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 241 பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்துவருகின்றன. இவைகளில் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 120 படகுகள் வீதம் கடலுக்குச் செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடிக்கவும், முகக் கவசம் அணிந்து செல்லவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடித் துறைமுகத்துக்கு வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய துறைமுக வாசலில் தெர்மல் இமேஜ் ஸ்கேனர் கருவி பொருத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
மீனவர் படகு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மீனவர் போஸ்கோ கூறுகையில், “விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் காப்பதற்காக வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல அரசு அனுமதித்துள்ளது. அதற்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்நிலையில், பாதுகாப்பாக விசைப் படகு மீன்பிடி தொழிலை மேற்கொள்வதற்காக பல்வேறு வழிமுறைகளை அரசு வகுத்துள்ளது.
அதன்படி மீனவர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசங்கள் அணிந்து பணியில் ஈடுபடுவார்கள். வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து மீன் கொள்முதலுக்கு வருவோர் கட்டாயம் கை கழுவி சுத்தம் செய்த பின்னரே மீன்பிடித் துறைமுகத்திற்குள் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மீன்வளத் துறை அலுவலர்களுடன் இணைந்து செய்ய உள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: 25 நாட்களுக்குப் பின் கடலுக்குச் சென்று திரும்பிய மீனவர்கள்!