தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகவும், பொதுமக்கள் பலர் நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் 100 நாட்கள் போராட்டத்தை பொதுமக்கள் முன்னெடுத்தனர்.
போராட்டத்தின் இறுதி நாளான மே22ஆம் தேதியன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 13 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை
இச்சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில், துப்பாக்கிச்சூடு நடந்த தினமான மே 22ஆம் தேதியன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுக்களான தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டியக்கம் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் அமைதி பேரணி, மவுன அஞ்சலி செலுத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாலும், மே 23ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாலும், மவுன அஞ்சலி, பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்க மறுத்தது.
மாறாக அன்றைய தினம், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளரங்க கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்து அதில் பங்கேற்கும் நபர்கள் குறித்த விவரத்தையும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் சார்பில் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்படும் என ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களான கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது, 'ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் வருகிற மே 22ஆம் தேதியன்று மவுன அஞ்சலி நடத்துவதற்கும், பொது மக்கள் பேரணி நடத்துவதற்கும் அனுமதி கேட்டிருந்தோம்.
தற்போது வரை அதற்கான அனுமதி மறுத்து மாவட்ட நிர்வாகத்தினர் எங்களுக்கு எந்த வித கடிதமும் வழங்கவில்லை. ஒருவேளை தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை காரணம்காட்டி அனுமதி மறுக்கும் பட்சத்தில் தேர்தல் முடிவு அறிவிப்புக்குப் பின்னர் வேறொரு தேதியில் அனுமதி வழங்கினால் அதனை ஏற்றுக்கொண்டு அந்த தேதியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்த தயாராக உள்ளோம்' என கூறினார்.