தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கரோனா 3ஆம் அலையான ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிவேகமாகப் பரவிவருகிறது. இதனைக்கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கைக் கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை கடைபிடித்தல், பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை, திருமணம், துக்க நிகழ்ச்சி போன்றவைகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி எனக் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. தொற்று அதிகம் பரவும் மாவட்டங்களில் நோய்க் கட்டுபாட்டு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
முக்கிய பகுதிகள் வெறிச்சோடின
இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தமிழ்நாட்டில் ஜனவரி 15, 16,17 ஆகிய மூன்று நாள்கள் மதுக்கடைகளை மூடவும் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இது நாளை காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்பதால் ஊரடங்கு விதிமுறைகளைக் கடைபிடிக்க பொதுமக்கள், அரசுக்கு ஒத்துழைப்பு தரும்படி காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
முழு ஊரடங்கைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகரின் முக்கிய பகுதிகளான தமிழ் சாலை, வ.உ.சி. சாலை, கீழரத வீதி, பழைய துறைமுக சாலை ரோடு, ஜெயராஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.மருந்தகம், பால், காய்கறி அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.