தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி முறைப்படி நேற்று (மே.13) தொடங்கியது. முதற்கட்டமாக, 4.820 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பயன்பாட்டுக்காக வேதாந்தா நிறுவனம் அனுப்பி வைத்தது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரியை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்த நிலையில், நேற்றிரவு(மே.13) ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி அலகில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக, ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. பிராண வாயுவை குளிர்விக்க பயன்படும் கொள்கலனில் ஏற்பட்ட முக்கிய பழுது காரணமாக ஆக்ஸிஜன் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்ததன் விளைவாக, இப்பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என, வேதாந்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குளிர்விப்பான் இயந்திரத்தைப் பழுது நீக்கும் பணியில் அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இயந்திரங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்பதனால் குளிர்விக்கும் அலகை திறந்து பார்த்தால் தான் உண்மையான பழுது என்ன என்பது தெரியவரும் என தகவல்கள் கூறுகின்றன. இயந்திரத்தைச் சரி செய்து, மீண்டும் உற்பத்தியைத் தொடங்க 2 முதல் 3 நாட்கள் வரை ஆகும் என்பதால், அடுத்த 3 நாட்களுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி நடைபெற வாய்ப்பில்லை எனவும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.