தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய எல்லைப் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ளது. இந்த சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன், கடந்த வாரம் நெல்லை பாளையங்கோட்டை காவல்நிலையத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் சார்பில் நடத்தப்பட்ட பிரியாவிடை நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு உள்ளிட்ட காவல்நியைங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கலந்துகொண்டதாக வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலனிடம் மனு அளித்தனர்.