தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர், ஆட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் தியாகராஜன் மற்றும் துணைத்தலைவர் பரமசிவன் ஆகியோர் கூறியதாவது, ஸ்டெர்லைட் ஆலை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தூத்துக்குடியில் இயங்கி வந்தது. தற்போது ஆலை மூடப்பட்டதால் அதனை நம்பி வாழ்ந்த 2 ஆயிரம் குடும்பத்தினருக்கு நேரடியாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அரசு அழைக்கின்றது. ஆனால், உட்கட்டமைப்பு வசதிகளுடன் தயாராக உள்ள கம்பெனிகளை திறக்க நடவடிக்கை எடுப்பதில்லை. எந்த ஆலையை தொடங்க நினைத்தாலும் போராட்டம் என புறப்படுவதால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டன.
ஸ்டெர்லைட் ஆலையை மூடி அதன் மூலமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதும், 13 பேரின் உயிர் பறி போனதும்தான் மிச்சம். வேறு எந்தச் சூழ்நிலையும் இங்கு மாறவில்லை. ஆகவே, தமிழ்நாடு அரசு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 20 ஆயிரம் நபர்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றனர்.
இதையும் படிங்க:'கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' - ஸ்டாலின்