தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கதைகளை எழுதும் கல்லூரி காவலாளி கவுரவ பேராசிரியர் ஆன கதை!

தூத்துக்குடி: காவலாளியும் படைப்பாளியாகலாம், எழுத்துக்கும், சிந்தனைக்கும் படிப்பு ஒரு தடையில்லை என்பதற்கு ஸ்ரீதர கணேசனின் நாவல்கள் சாட்சி. வாட்ச்மேன், எழுத்தாளர் ஸ்ரீதர கணேசன் பற்றிய சிறப்பு தொகுப்பு.

ganesan
ganesan

By

Published : Oct 28, 2020, 3:57 PM IST

"எழுத்தும் கலை அழகுதான்... வறுமையை எப்படி கலை அழகாக மாற்றுவது, எனது வறுமையை பாடினாலும், அழுதாலும் கேட்போர் யாருமில்லை. எழுத்து எனக்கு கிடைத்த பொக்கிஷம், அதை கலை அழகாக வாசிப்பாளர்களின் கண்களுக்கு விருந்தாக்க வேண்டும். எழுத்துக்காக அதிக நேரங்களை செலவிடுவது ஒன்றும் எனக்கு புதிதல்ல...

அதில் கிடைக்கும் பக்கங்கள் கடலில் முக்குளித்து முத்து எடுப்பது மூன்று பக்கங்கள் தான் செழுமையடையும்... மற்ற பக்கங்கள் எல்லாமே காகிதமாகிவிடும். நான் செலழிக்கும் எட்டு மணிநேரத்தில் நான்கு பக்கங்கள் எனக்கு பிடித்த கதைகளாய் மாறும். இந்த நெடுந்தூர பயணம் என்னுடன் தொடர்ந்கொண்டே இருக்கிறது" என்கிறார் எழுத்தாளர் ஸ்ரீதர கணேசன்.

ஸ்ரீதர கணேசன் கல்லூரி வாட்ச்மேன் மட்டுமல்ல, விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு நல்ல படைப்பாளியும் கூட. குழந்தைகள், குமரிகள், கிழவர்கள், மனைவிமார்கள், நண்பர்கள், சாமியார்கள் என பலதரப்பட்ட மனிதர்கள் வருகிறார்கள். பிடில் வாசிக்கும் கிழவரைக் காட்டும் "ரசிகனைத் தேடி' கதையில் வரும் நீளவசனங்கள், சினிமாவிற்கு உறித்த மொழி நடையில் இருக்கும்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் ஸ்ரீதர கணேசன் கதைகள் எளிமையானவை, பாவனைகள் அற்றவை அவரைப் போலவே. வாழ்க்கை ஓட்டத்தின் மூலமாக கிடைத்த அனுபவ நிகழ்வுகளையே மூலதனமாக்கி அறிவை வளர்த்துக் கொண்ட ஒருவர் இன்று பல்கலைக்கழகத்தின் கவுரவ பேராசிரியராக நியமனம் செய்திருக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

தூத்துக்குடி தபால்தந்தி காலனியைச் சேர்ந்த ஸ்ரீதர கணேசன், ஏழாம் வகுப்பு படிக்கும்போதே ஆசிரியரின் கண்டிப்புக்கு பயந்து படிப்பை பாதியில் நிறுத்தியவர். பள்ளி படிப்பை இடைவிட்ட படைப்பாளியாக பல இளைஞர்களின் கதையின் நாயகனாக ஜொலிக்கிறார். கல்வி நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்துக்கொண்டே எழுத்து மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். நூற்பாலை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த ஸ்ரீதர கணேசனுக்கு தினமும் 12 மணி நேரம் வேலை ஒதுக்கப்பட்டது.

பணிச்சுமை இருந்தபோதும், தன் ஆர்வத்துக்கு தடை போட விரும்பாத அவர், வீட்டின் அருகேயுள்ள பொது நூலகம் ஒன்றில் உறுப்பினராக சேர்ந்து இரவு 7 மணி முதல் 9 மணி வரை தனது அறிவுக்கு தீனி போடும் வகையில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்புகளை படித்து வந்துள்ளார். பள்ளி பருவ வயதில் புத்தகங்கள் படித்து கழித்த ஸ்ரீதரகணேசன், வாலிப பருவத்திற்குள் நுழைந்ததும் சிறுகதை எழுதத் தொடங்கினார்.

'மயங்குதல்', 'ஆசைகளும் ஆழங்களும்', 'விடியாத இரவுகள்' ஆகிய தலைப்புகளில் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். அவரது எழுத்திலிருந்த கருத்துச் செறிவும், ஆழமும் அந்த சிறுகதை தொகுப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர உதவிகரமாக இருந்தது. அக்காலகட்டத்தில் எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் தூத்துக்குடியில் தங்கியிருந்து உப்பு தொழிலாளர்களின் வாழ்க்கை தொடர்பாக ஒரு நாவலை எழுதினார்.

ஸ்ரீதர கணேசன் எழுத்து பயணம்

அந்த நாவல் ஏற்படுத்திய தாக்கம் ஸ்ரீதரகணேசன் "உப்புவயல்" என்ற நாவலை எழுதி வெளியிட ஏதுவாக அமைந்தது. இந்நாவலுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த இலக்கிய விருது மட்டுமல்லாமல் பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகளும் விருதுகளும் குவிந்தன. "வாங்கல்", "சந்தி", "சடையன்குளம்" ஆகிய தலைப்புகளில் ஸ்ரீதர் கணேசன் நாவல்களை எழுதி பதிப்புகளை வெளியிட்டார். இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இவரது படைப்புகள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கடல்கடந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனையாகின. பதிப்பாளர்களும் இவருடைய நாவல்களுக்கு முக்கியத்துவம் தந்து பதிப்புரிமை பெற்றனர். ஒரு எழுத்தாளரை கவுரவிக்கும் வகையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் ஸ்ரீதர கணேசனை ஒரு வருடத்திற்கு கவுரவ பேராசிரியராக பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது.

ஸ்ரீதர கணேசன் நாவல்கள்

எழுத்துத்துறையில் எந்த எதிர்பார்ப்புகளின்றி நுழைந்த ஸ்ரீதர் கணேசனுக்கு ஆர்வமும், முயற்சியும் மட்டுமே இத்தகைய கவுரவங்களை பெற்றுத் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ்ச்சமூகம் அவரை என்றும் போற்றி வணங்கும்.

அவரை விட்டு பிரியாத மூக்குக் கண்ணாடி

இதையும் படிங்க:திடக்கழிவு மேலாண்மையில் முன்மாதிரியாக திகழும் பேரூராட்சி - செயல் அலுவலரின் வியப்பூட்டும் முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details