தூத்துக்குடி:உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா, கடந்த 13ஆம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தினமும் காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடைபெற்று வருகிறது.
உச்சி கால அபிஷேகம் தீபாராதனையைத் தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்:விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை (நவ.18) மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் என தொடர்ந்து பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும் நடைபெறும்.
பகல் 12.45 மணிக்கு யாகசாலையிலிருந்து ஜெயந்தி நாதர் எழுந்தருளி, சண்முக விலாச மண்டபம் சேர்வார். பிற்பகல் 2 மணிக்கு மேல் திருவாடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறும். மாலை 4 மணி அளவில், சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்து அருளியதைத் தொடர்ந்து சூரசம்ஹாரம் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
சூரசம்ஹாரம் முடிந்ததும், சந்தோஷ மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை நடைபெறும். பின்னர் கிரி பிரகாரம் வலம் வந்து, சுவாமி கோயில் சேர்வார். இரவு கோயிலில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் நடைபெறும்.
7ஆம் திருநாள் நாளான நவம்பர் 19ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு, தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பாடு, காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சி கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சுவாமி காட்சி கொடுத்தல், மாலை மாற்றும் வைபவமும், இரவு சுவாமிக்கும் தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.
சிறப்பு ரயில்கள்:திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை (நவ.18) சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர். இதனையடுத்து பக்தர்களின் வசதிக்காக இரண்டு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை - திருநெல்வேலிக்கு இன்று (நவ.17) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, நாளை நண்பகல் 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். திருச்செந்தூர் முதல் தாம்பரம் வரையில் நாளை (நவ.18) இரவு 10.10 மணிக்கு திருச்செந்தூரில் புறப்பட்டு, நவம்பர் 19 நண்பகல் 12.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மூடல்:சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை நடைபெறுவதை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோயிலைச் சுற்றியுள்ள மதுபானக் கடைகள் இயங்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அடைக்கலாபுரம், பரமன்குறிச்சி சாலை, பாளையங்கோட்டை ரோடு மற்றும் குலசை மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள 4 மதுபானக் கடைகள் மட்டும் செயல்படாது.
மேலும், அன்றைய நாளில் மதுபானக் விற்பனை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தல் மதுபானத்தைப் பதுக்கி வைத்தல் போன்ற செயல்களைக் கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:திருச்செந்தூர் கோயில் தரிசனக் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்.. பக்தர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு!