தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்த தொகுப்பு - சட்டமன்றம்

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர் விவரம் மற்றும் அரசியல் நிலவரம் குறித்த சிறிய தொகுப்பை பார்கலாம்.

கோப்புக்காட்சி

By

Published : Apr 22, 2019, 7:27 AM IST

தமிழகத்தில் மக்களவைக்கான தேர்தல் ஏப்.18-ம்தேதி நடைப்பெற்றது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் மொத்தம் 69.05 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதுகடந்த ஆண்டை காட்டிலும் 3 சதவீதம் அதிகமாக கருதப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தலும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்டது. விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று (ஏப்.22) தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 29-ம் தேதி ஆகும். வேட்புமனு பரிசீலனை 30-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவினை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் மே 2ஆம் தேதி ஆகும்.

தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக, ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஒட்டப்பிடாரம் தொகுதியை தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கு பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவர். இத்தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 33 ஆயிரத்து 847 ஆகும். இந்த தொகுதியின் கடந்தகால நிலவரங்களை பொறுத்தவரையில் அதிமுக கூட்டணி கட்சிகளே அதிக முறை வெற்றி பெற்று ஓட்டப்பிடாரம் தொகுதியை தக்க வைத்துள்ளது. அதன்படி அதிமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 1 முறையும், காங்கிரஸ் கூட்டணி 1 முறையும், கம்யூனிஸ்ட் கட்சி 1 முறையும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளன..

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டப்பிடாரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்திருப்பதாக புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதுபோல அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு மற்றும் குளறுபடிகள் காரணமாக அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி டிடிவி தினகரன் - சசிகலா தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதைதொடர்ந்து சட்டமன்ற சபாநாயகர் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் ஒட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ சுந்தரராஜனும் ஒருவராவார். இதனால் ஒட்டப்பிடாரம் தொகுதி காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் முதற்கட்டமாக நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றுடன் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து ஒட்டப்பிடாரம் தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ சுந்தரராஜன் வெற்றியை எதிர்த்து கிருஷ்ணசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக எம்.சி.சண்முகையா அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தரப்பில் வேட்பாளர்கள் மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அஇஅதிமுக கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ சுந்தரராஜன் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதிமுக தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்படும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட அதிமுக கட்சியினர் மிகுந்த ஆவலோடு உள்ளனர். ஒட்டப்பிடாரம் தொகுதி முன்னிட்டு தலைவர்களின் வருகை, பிரச்சார திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது இடைத்தேர்தலின் பரப்புரையை தொடங்குகிறார். இதன்படி மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அவர் தூத்துக்குடியில் முகாமிட்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். இதனைத் தொடர்ந்து 3 மற்றும் 4ஆம் தேதி மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வருகை தரவுள்ளார்.

அதைத் தொடர்ந்து 5 மற்றும் 6ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். தொடர்ந்து இரண்டாவது கட்டமாக மே 14-ஆம் தேதி கமல்ஹாசனும், 15ஆம் தேதி டிடிவி தினகரன் பிரச்சாரத்துக்காக வருகை தர உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details