தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த மழை வெள்ளம் காரணமாக, பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் சேதமாகின. மேலும், மாநகரின் பல்வேறு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளும் குளிர் பதனக் கிடங்குகளும் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், மழை வெள்ள பாதிப்புகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் இழப்பீடு வழங்குவதற்கான சிறப்பு முகாம்களை, தி நியூ இந்தியா அசூரன்ஸ் லிமிடெட், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (UIIC) மற்றும் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து, தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் சிறப்பு முகாம் அமைத்துள்ளது.
இந்த முகாமில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள், தங்கள் உடைமைகளுக்கு இழப்பீடு கோரி காப்பீடு நிறுவனங்களை அணுகி வருகின்றனர். தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மட்டும் இதுவரை சுமார் 250க்கும் மேற்பட்டோர் இழப்பீடு கேட்டு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.