தூத்துக்குடி:தை அமாவாசை தினத்தை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். தை, ஆடி அம்மாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் ஆண்டு முழுவதும் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்துவருகிறது.
அந்த வகையில் சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு எள், அன்னம், தர்ப்பபுள் வைத்து பிண்டம் வளர்த்து வேத மந்திரங்களை முழங்கி தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினர்.