முருகனின் அறுபடை வீடுகளின் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோயிலில் அக்டோபர் 28ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
இதனையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்குச் சென்று விரதமிருந்து வழிபடுகின்றனர். இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் திருவிழா இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கோயில் கடற்கரையோரத்தில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குள் வரத் தொடங்கியுள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்புக் கருதி சென்னை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் மூவாயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரையின் பத்து இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமலிருக்க காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கடலில் புனித நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி தடுப்பு வலைகள் அமைக்கப்பட்டு பைபர் படகுகள் மூலம் கண்காணிக்கப்பட்டுவருகிறது. கோயில் வளாகம் மட்டுமல்லாது நகரின் முக்கியப் பகுதிகள் அனைத்திலும் எழுபது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருநெல்வேலி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.