தூத்துக்குடி:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட பாஜக பிரமுகரை தூத்துக்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது மகன் செல்வபாலன் (29).
எலக்டிரிசியனான செல்வபாலன் பாரதிய ஜனதா கட்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் சமூக வலைதளப்பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில், நேற்று இவர் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறித்து ட்விட்டரில் வந்த தவறான படத்தை டவுன்லோட் செய்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி, சுந்தரவேல் புரம் 2வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவர் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். செல்வபாலன் பதிவிட்டு இருந்த முகநூல் பக்க பதிவு குறித்து அந்தோணி ராஜ் காவல்துறையில் புகார் அளித்தார்.
அந்தோணி ராஜ் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ் உத்தரவின் அடிப்படையில், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில், உதவி ஆய்வாளர் வசந்த் குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் செல்வபாலனை கைது செய்து, செக்சன் 153, 153(A)(1)(A), 505(1)(b), 504 IPC, 67(A) IT Act ஆகிய 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி ஜெ. எம்.3 நீதிபதி சேரலாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து செல்வபாலனிடம் விசாரணை நடத்திய நீதிபதி சேரலாதன் விசாரணையின் அடிப்படையில் செல்வபாலனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார். மின்சாரத்துறை அமைச்சர் கைது செய்யப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில், தூத்துக்குடி பாஜக நிர்வாகி முதல்வர் படத்தை சித்தரித்து வெளியிட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட பணிகளை விமர்சிக்கும் விதம் சமூக வளைதள பக்கத்தில் பாஜக ஆதரவாளரான கிஷோர் கே சுவாமி கருத்து பதிவிட்டு இருந்தார். அவரது பதிவு குறித்து திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கிஷோர் கே சுவாமி மீது நடவடிக்கை எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்; பாஜகவுக்கு வார்னிங் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!