தூத்துக்குடி:முத்தையாபுரம் அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர், அற்புதராஜ் (65). இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் தங்கதுரை சென்னையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம், தங்கதுரை அவரது மனைவி அஸ்வினி (28) மற்றும் 5 வயது மகனுடன் முத்தையாபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பின்னர் தங்கதுரை தனது குடும்பத்தை விட்டு விட்டு, சென்னைக்கு மீண்டும் சென்றுள்ளார். அனைவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி இரவு அற்புதராஜ் தனது பேன்சி கடைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் அற்புதராஜ் மனைவி செல்வராணி (60), மருமகள் அஸ்வினி, 5 வயது பேரக்குழந்தை ஆகியோர் இருந்துள்ளனர்.
அப்போது பர்தா அணிந்திருந்த 2 மர்ம நபர்கள் அவர்கள் வீட்டின் உள்ளே புகுந்து, வீட்டில் இருந்த செல்வராணி மற்றும் அஸ்வினியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் கழுத்தில் கிடந்த செயின் மற்றும் மோதிரத்தை முதலில் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் பீரோவைத் திறக்கச் சொல்லி பீரோவில் இருந்த கம்மல், மூக்குத்தி, செயின், வளையல் உள்பட சுமார் 58 சவரன் நகைகளை கொள்ளை அடித்ததுடன், மாமியார் மருமகள் இருவரையும் துப்பட்டாவால் கட்டி போட்டு விட்டு தப்பி ஓடியதாகவும், மருமகள் அஸ்வினி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், செல்வராணி மற்றும் அஸ்வினியை தனித்தனியாக போலீசார் விசாரித்தனர். இதில் முன்னுக்குப் பின் முரணான தகவலை அஸ்வினி அளித்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து சந்தேகமடைந்த டிஎஸ்பி சத்யராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மீண்டும் அஸ்வினியுடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் நடத்தியது கொள்ளை நாடகம் என்பது உறுதியாகி உள்ளது.