தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட மூன்று சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எட்டயபுரம் பாரதியார் மணி மண்டபத்தில் உள்ள மகாகவி பாரதியார் திருவுருவைச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து மண்டபத்துக்கு வந்த சீமான் முன்னிலையில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்.
பின்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது; ''நாட்டில் நீர் வளம், நிலவளத்தைத் தாண்டி அறிவு வளம் முக்கியம். ஒரு நாட்டின் எதிர்காலமே வகுப்பறையில் தான் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு வகுப்பறை வர்த்தக அறையாக மாறிவிட்டது. யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ அவர்கள் நல்ல கல்வியை கற்றுக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளது. காரணம் மாணவர்கள் வரவில்லை. ஏன் வரவில்லை. பள்ளிகள் தரம் இல்லை.
செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவம் பார்க்க முடியவில்லை ஏன்? தரமாக இல்லை. தரங்கெட்டவர்கள் கையில் அதிகாரம், மற்ற நாடுகளில் கல்வி, குடிநீர், மின்விநியோகம் என்று அரசு நடத்தும் அனைத்தும் தரமாக உள்ளது ஏன்? தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் சாலை சரியாக உள்ளதா?
விவசாயத்திற்குத் தனிபட்ஜெட் போட்டால் போதாது, விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை, 100நாள் வேலை திட்டத்தை எப்படி பயன்படுத்துவது என்று இங்கு தெரியவில்லை. கடலில் சிலை வைக்க, டாஸ்மாக் மது பாட்டில்களை பாதுகாக்க கொடுக்கும் முக்கியத்துவத்தை உயிர் பாதுகாக்கும் விவசாயப் பொருட்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை.
சினிமா டிக்கெட் விலை என்ன? விவசாயப் பொருட்களின் விலை என்ன? ஊழல், லஞ்சம் பற்றி பேச பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, கட்சிகளுக்கு அருகதை இல்லை. மணிப்பூர் கலவரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. மணிப்பூர் போல தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க பாஜக முயல்கிறது. விஷத்தை கொடுத்து ஒரு குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க முடியும் என்று நம்பவில்லை. ஸ்டெர்லைட் வேண்டாம் .. வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்லட்டும். தாமிரத்தைப் பற்றி பேசுபவர்கள், தண்ணீரைப் பற்றி பேசுவார்களா? அங்கு வேலை பார்ப்பவர்கள், அந்த ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி குடியிருப்பார்களா?