தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிறிஸ்டண்டைன் ராஜசேகர், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் காளிதாஸ் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது சீமான் பேசியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்? இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பதில் தெரிவிக்கும்போது துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தொலைக்காட்சியை பார்த்துதான் நான் அறிந்து கொண்டேன் என்று சொல்கிறார்.
மக்கள் சிந்திய ரத்தத்திற்கும் வடிந்த கண்ணீருக்கும் மக்கள் விடைதேடக்கூடிய காலம் இது. விவசாயிகள் கடனாளிகளானது காங்கிரஸ் - திமுக ஆட்சியில்தான். காங்கிரஸ் கூட்டணியும், பாஜக கூட்டணியும் வாக்குக்காக நிற்கிறார்கள். நாங்கள் நாட்டுக்காக நிற்கிறோம்.
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமையும்போது நெய்தல் படையை அமைப்பேன். நெய்தல் படையில் வீரர்கள் தேர்வு என்பது மீனவர்கள் மட்டும்தான். அதற்கான தகுதி படகோட்டவும், நீச்சல் மட்டும் தெரிந்திருந்தால் போதும்.