தூத்துக்குடி மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் அவர்களுடைய பெற்றோர், உறவினர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குறித்து தபால் கார்டுகளை எழுதி அனுப்பும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகள் எழுதிய தபால் கார்டுகளை தபால் துறை அலுவலரிடம் ஒப்படைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 9,10,11,12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஒரு லட்சம் பேர், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக தங்களுடைய பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதில் பெரும்பாலும் "தேர்தலில் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது" என்பதை வலியுறுத்தி மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.