தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புது ரோடு சாலையில் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை 270 மாணவ, மாணவிகளும், 10 ஆசிரியர்கள் என மொத்தம் 280 பேர் பள்ளிக்கு வருகை புரிந்து வருகின்றனர்.
மேலும், பள்ளி வளாகத்தினுள் அங்கன்வாடி மையம் மாணவ மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் தயாரிக்கும் சத்துணவு கூடம் போன்றவைகளும் அமைந்துள்ளது. தொடர்ந்து இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு 5 கழிவறைகள் உள்ளன. அதையே மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக, 17ஆம் தேதி பள்ளியில் உள்ள கழிவறையின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் நகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, உடனடியாக கழிவறையை சீரமைத்துத் தர வேண்டும் என எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை தரும் நிலையிலும், தற்போது வரை சேதமடைந்த பள்ளிக் கழிவறையை சீரமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. அதனால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இருபாலர்களும் ஒரே கழிவறையைப் பயன்படுத்தி வரும் சூழல் நிலவி உள்ளது. இதனால் மாணவ மாணவிகள் மிகுந்த அச்சத்துடனே கழிவறைக்குச் சென்று வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, பள்ளி அருகில் அரசு மருத்துவமனையின் பிணவறை அருகே இருக்கின்றது. மேலும் மருத்துவக் கழிவு குப்பைகளை பள்ளி அருகே கொட்டுவதனால் துர்நாற்றத்துடன் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாணவர்களின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, நிலைமை கைமீறும் முன்பாகவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதனை சீர் செய்ய வேண்டும் என்று பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, விரைவில் பள்ளி கழிவறை சீரமைக்கப்படும் என்றும், மருத்துவக் கழிவு அகற்றத்திற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க:போடியில் குப்பைக் கிடங்காக மாறி வரும் அரசு பயணியர் தங்கும் விடுதி!