தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் விவகாரம்: தன்னார்வலர்களிடம் விசாரணை! - Sathankulam Custodial Deaths case

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக அப்பகுதியில் கரோனா தன்னார்வலர்களாக பணியாற்றியவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

ஐஜி சங்கர்
ஐஜி சங்கர்

By

Published : Jul 6, 2020, 3:57 PM IST

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் சிறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அதனடிப்படையில், பல்வேறு குழுக்களாக விசாரணை நடத்திய சிபிசிஐடி காவல் துறையினர், பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், 2 உதவி ஆய்வாளர்கள், ஒரு காவலர் என நான்கு பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். தந்தை-மகன் இறந்த வழக்கில் முக்கிய சாட்சியாக பெண் தலைமைக் காவலர் ரேவதி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு விசாரணை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கு தொடர்பாக ஜெயராஜின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கரோனா தன்னார்வலராக பணிபுரிந்தவர்களிடம் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஐஜி சங்கர் பேசிய காணொலி

இது குறித்து செய்தியாளர்களிடம் சிபிசிஐடி ஐஜி சங்கர் கூறுகையில், “ சாத்தான்குளம் வழக்கு விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் உறவினர்கள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கரோனா தன்னார்வலராக பணியாற்றியவர்கள் ஆகியோரிடம் அடுத்தக்கட்ட விசாரணையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 5 காவல் அலுவர்களையும், இந்த வாரத்திற்குள் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளோம்” என்றார்.

இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பிக்க பயன்படுத்திய காரின் உரிமையாளர் சுரேஷ் என்பவர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் ஆஜராகினார். இவர் தனது காரின் ஆவணங்களை காட்டி, அந்த காரைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுகோள் விடுத்தார். காரை பயன்படுத்தி எந்தவித குற்ற செயல்களிலும் ஈடுபடாதக் காரணத்தினால் சுரேஷின் காரை எடுத்துச் செல்வதற்கு சிபிசிஐடி அனுமதி அளித்தனர்.

இதையும் படிங்க: காவலர் மகாராஜன் ஆஜரான தகவல் பொய்யானது - ஐஜி சங்கர்

ABOUT THE AUTHOR

...view details