தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 15, 2020, 7:57 PM IST

ETV Bharat / state

பாஜகவின் ஓராண்டு சாதனைக் கூட்டம் : செய்தியாளர்களை அலட்சியப்படுத்திய சசிகலா புஷ்பா

தூத்துக்குடி : மத்திய அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டத்தில், முன்னாள் எம். பி சசிகலா புஷ்பா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

sasikala
sasikala

மத்தியில், ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்று ஓராண்டு முடிவடைந்த நிலையில், பாஜக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த செய்தியாளர் சந்திப்பு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, மத்திய பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்கள், கடன் உதவிகள், நிதி ஒதுக்கீடுகள், தூய்மை பாரதம் திட்டம், முத்ரா திட்டம், ஜன்தன் யோஜனா, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பொருளாதாரத்திற்கான முன்னெடுப்புகள், ஜிஎஸ்டி, மீனவர்கள், சிறு வணிகர்கள், குறு வணிகர்களுக்கான கடன் உதவிகள் உள்ளிட்ட பல திட்டங்களை குறித்து அவர் விளக்கிப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, கரோனா நெருக்கடி காலத்தில் குடிபெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் உயிரிழந்த சம்பவங்களை, பாஜக அரசின் இரண்டாம் ஆண்டு தொடக்க காலத்தில் ஏற்பட்ட கரும்புள்ளியாக கருதலாமா என செய்தியாளர்களில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சசிகலா புஷ்பா "அவ்வாறு கூறிவிட முடியாது. குடிபெயர் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதைத் தவிர்க்கும் வகையில், அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

குறிப்பாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நான்காயிரம் சிறப்பு ரயில்களை இயக்க உத்தரவிட்டு குடிபெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் அரசோ அவர்களை அழைத்துச் செல்வதற்கு பேருந்து வசதியை கூட ஏற்படுத்தித் தரவில்லை" எனக் குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, குடிபெயர் தொழிலாளர்கள் குறித்து செய்தியாளர்கள் மேலும் கேள்விகளை எழுப்பிய நிலையில், அவற்றுக்கு பதிலளிக்காமல் சசிகலா புஷ்பா எழுந்து சென்றார். இது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:'நினைத்தாலே பீதியாகுது' - நேபாளத்தினரின் தாக்குதல் குறித்து கண்ணீர் மல்க விவரிக்கும் சாட்சிகள்

ABOUT THE AUTHOR

...view details