தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலின், இளங்கோவன் பிரதமர் மீது தனிநபர் தாக்குதல் நடத்தி வருகின்றனர் - சரத்குமார் குற்றச்சாட்டு - personal

தூத்துக்குடி: ஸ்டாலின், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் நாகரீகம் தெரியாமல் பிரதமர் மோடி மீது தனிநபர் தாக்குதலை நடத்தி வருவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

By

Published : Apr 13, 2019, 11:32 AM IST

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் விளாத்திக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் ஆகியேரை ஆதரித்து விளாத்திக்குளம் அருகே குளத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் தமிழ்நாட்டில் மாபெரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கட்சிகளுக்கு பல்வேறு கொள்கைகள் ,கோட்பாடுகள், இருந்தாலும் ஒற்றுமையுடன் மத்தியில் நிலையான ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் அமைய வேண்டும் என்பதற்காக இணைந்துள்ளன.

இந்த கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும். மத்தியில் நிலையான நல்லதோர் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு தோல்வியடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அங்கு அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் களத்தில் உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரசுடன் கம்யூனிஸ்ட் கூட்டணியில் உள்ளனர். இதுவே சந்தர்ப்பவாத கூட்டணி.

தேனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன், பிரதமர் மோடிக்கு அவரது பெற்றோர் கேடி என பெயர் வைத்து இருக்கலாம் என கூறுகிறார். அரசியலில் தனிநபர் விமர்சனம் இருக்கக் கூடாது. ஆனால் இளங்கோவன், ஸ்டாலின் உள்ளிட்டோர் தனிநபர் விமர்சனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நாகரீகம் தெரியாது. ஒரு நாட்டின் பிரதமரை அநாகரிகமாக விமர்சனம் செய்பவர் ஒரு வேட்பாளரா?. எனவே மத்தியில் நிலையான சிறப்பான ஆட்சி அமைய பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details