தூத்துக்குடி: நம் நாட்டில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில், தூத்துக்குடியில் ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகி வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அந்தமான், மாலத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கும் உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பொதுவாக, பருவமழை முடிந்து பிப்ரவரி மாதம் உப்பு உற்பத்திக்கான ஆயத்தப் பணிகள் துவங்கும். வடகிழக்குப் பருவ மழையால் சேதம் அடைந்திருந்த அளங்களைச் சமப்படுத்தி உப்பு உற்பத்திக்கானப் பணிகளை உற்பத்தியாளர்கள் துவக்கி விடுவர். அந்த வகையில் கடந்து சில நாட்களாக உப்பளங்களைத் தயார் செய்யும் பணித் தீவிரமாக நடந்து வந்தது. இந்தாண்டு வழக்கத்தை விட பருவ மழைக் குறைவாகப் பெய்ததால் உப்பளங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
எனினும், ஓரளவுப் பாதிக்கப்பட்ட அளங்களை உற்பத்தியாளர்கள் சமப்படுத்தி வந்தனர். வழக்கமாக, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கு உகந்த காலம். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு உற்பத்தி முடிவடையும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கத்திலிருந்தே அக்னியை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்தி வருவதால் உப்பு உற்பத்தி மிக தீவிரமாக நடந்து வருகிறது.
தீவிரமாகும் உப்பு உற்பத்தி... கூடுதல் போர்வெல் அமைக்கும் பணி... கடல் அருகே உள்ள உப்பளங்களுக்கு நேரடியாக கடலில் இருந்துத் தண்ணீரை பாய்ச்சி உப்பு உற்பத்தி நடந்து கொண்டிருக்கிறது. கடலில் இருந்து சுமார் இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள உப்பளங்களில் போர்வெல் மூலம் தண்ணீர் பாய்ச்சி, உப்பு உற்பத்தி செய்யும் பணி நடைபெறுகிறது. கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழை போதிய அளவில் பெய்யாததால் தற்போது போர்களில் நிலத்தடி நீர் மட்டம் கிடுகிடுவன சரிந்து வருகிறது.
இதுக் குறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகையில், ’’வட கிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லாமல் போவதால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால் பல உற்பத்தியாளர்கள் தற்போது போர் போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை பெய்தாலும் அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயருமா என்பது சந்தேகம்தான், தற்பொழுது உப்பு டன் 2,000 முதல் 2,500 வரை விற்கப்படுகிறது. இது நல்ல விலை தான், ஒரு வேளை கோடை மழை அதிகளவில் பெய்தால் உப்பு விலை உயர வாய்ப்பு இருக்கிறது. தென்மேற்குப் பருவக்காற்று வீச துவங்கினால் தான் உப்பு உற்பத்தி அமோகமாக இருக்கும்’’ என்று கூறினார்.
இதையும் படிங்க:'தயிர்' to 'தஹி' - ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி மொழியா? - மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை!