தூத்துக்குடி: கடந்த வாரம் இந்தோனேசியாவில் இருந்து 40 அடி நீளமுள்ள 4 கண்டெய்னர்களில் பழைய துணிகள் இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. திருப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த இறக்குமதியை செய்ததாக கூறப்படும் நிலையில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில், அந்த கண்டெய்னரை சோதனை செய்தனர்.
அப்போது, பழைய துணிகள் முன்பகுதியில் வைக்கப்பட்டும், அதற்கு உள்பகுதியில் கொட்டைப்பாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர், அந்த மூட்டைகளில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான 65 டன் கொட்டைப்பாக்கு இருந்ததைக் கண்டறிந்த அதிகாரிகள், உடனடியாக அவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பான விசாரணையில் இறங்கிய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட ரவிக்குமார் என்ற ரவி பகதூரை கைது செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள அவருக்குச் சொந்தமான அபி ஷிப்பிங் அன்ட் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் M/s ஸ்ரீ அபிராமி அம்மன் மில்ஸ் ஆகியவற்றில் சோதனை நடத்திய அதிகாரிகள், முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது இந்தோனேசியாவில் இருந்து கால்நடை தீவனம் என்று பெங்களூர் தனியார் நிறுவனத்திற்கு செல்வதாக குறிப்பிடப்பட்டு, 4 கண்டெய்னர்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. அதிலும் கொட்டைப்பாக்கு கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலைத் தொடர்ந்து கண்டெய்னரை சோதித்த போது, முன்பக்கம் கால்நடை தீவனம் வைக்கப்பட்டு, அதன் பின் 49 டன் கொட்டைப்பாக்கு கடத்தியது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.3 கோடியாகும். அதனைத் தொடர்ந்து, கடத்தல் உறுதியானதால் பெங்களூருவில் முகாமிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தை ரகசியமாக கண்காணிக்க வருவாய் புலனாய்வு அதிகாரிகள் உடனடியாக பெங்களூர் சென்றனர்.
அங்கு சென்ற போது தான், அப்படி ஒரு நிறுவனமே இல்லை என்பதும், போலியாக குறிப்பிட்டு கொட்டைப்பாக்கு கடத்தல் நடந்து இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், இதில் சுங்கத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்பதால், விசாரணை வலையத்திற்குள் சில அதிகாரிகளை கொண்டு வந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:'தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது என வந்துவிட்டேன்' - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!