தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த சந்திரன் - பேச்சியம்மாள் தம்பதியின் மகள் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகி கொச்சியில் வசித்து வருகிறார். தற்பொழுது ஐஸ்வர்யா கருவுற்றிருப்பதால் பிரசவத்திற்காக தனது பிறந்த வீட்டிற்கு வந்துள்ளார்.
சாலையின் தடுப்பில் மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் பலி! - கோவில்பட்டி
தூத்துக்குடி: கோவில்பட்டி சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருக்கும்போது அங்கிருந்த தடுப்பில் மோதி விபத்தானதில் பேச்சியம்மாள் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பேச்சியம்மாள், ஐஸ்வர்யா இருவரும் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில் பரிசோதனைக்கு சென்றுள்ளனர். பரிசோதனை முடித்து விட்டு ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது மாதங்கோவில் சாலையின் நடுவே இருந்த தடுப்பில் ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த பேச்சியம்மாள், ஐஸ்வர்யா இருவரும் சாலையில் விழுந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஐஸ்வர்யா சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று காயமடைந்த ஐஸ்வர்யாவை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேச்சியம்மாள் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து ஆட்டோ டிரைவர் தங்கமாரியை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.