தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மெயின் பஜாரில் உள்ள நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து, கடந்த 60 ஆண்டுகளுக்கும் பல கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதுவரை 136 கடைகளும், பெரும் வணிக வளாகங்களும் கட்டப்பட்டுள்ள நிலையில், மழைநீர் செல்வதற்கும், பொதுமக்கள் போக்குவரத்துக்கும், சாலை விரிவாக்கப் பணிகளுக்கும் இடையூறாக இருந்த இந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வணிக வளாகங்களை இடித்து அப்புறப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதனையடுத்து கடை வாடகைதாரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் இந்த வழக்கை நவம்பர் 26ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவின் பேரில் இன்று (நவம்பர் 28) காலை முதல் ஆக்கிரமிப்புக் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. வருவாய்த்துறை, காவல் துறை, நகராட்சி நிர்வாகம், மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் இப்பகுதியில் முகாமிட்ட வண்ணம் உள்ளனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் இப்பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைக் கதிரவன், நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை அலுவலர்கள், தீயணைப்புத் துறையினர், நகராட்சி ஊழியர்கள் என ஒட்டுமொத்த அரசுத்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கோவில்பட்டி நகரின் முக்கியப் பிரச்சனையாகத் திகழ்ந்த கடைகளை அகற்றும் பணியில் முன்னதாக ஈடுபட்டனர்.