தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அதிமுக 50ஆவது ஆண்டு பொன்விழா மற்றும் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், எட்டையாபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில், முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.பி.உதயக்குமார், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அதிமுக கட்சியில் 50 ஆண்டு காலம் பயணித்த மூத்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ், மற்றும் விருது வழங்கி கௌரவித்தனர். மேலும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எட்டையாபுரத்தில் உள்ள மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 7 முறை தனது நிலைப்பாட்டினை ஓ. பன்னீர்செல்வம் மாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ. பன்னீனர் செல்வம் முதலமைச்சர் பதவி ஏற்றார், பின்னர் ராஜினாமா செய்தார், பின்னர் தர்மயுத்தம் தொடங்கினார். பின் திமுகவுடன் இணைந்து சட்டப்பேரவையில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்தார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சியின் காரணமாக ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் கட்சியில் இணைக்கப்பட்டு துணை முதலமைச்சர், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இருந்த போதிலும் அவரிடம் இருந்து ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவில்லை. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கும்போது ஓபிஎஸ் மௌனயுத்தம் நடத்தினார்.