தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள நாணல்காடு பகுதியைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் இசக்கிப்பாண்டி (27). இவர் அந்தப் பகுதியில் கோழிப்பண்ணை நடத்திவந்தார். மேலும் மாடுகள் வாங்கி விற்கும் தரகு தொழில் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டிலிருந்த போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து, இசக்கிப்பாண்டி இருசக்கர வாகனத்தில் நெல்லை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே அகரம் விலக்குப் பகுதியில் சென்றுள்ளார். அப்போது இசக்கிப்பாண்டியின் இருசக்கர வாகனத்தை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்ட இசக்கிப்பாண்டி இது குறித்து தகவல் பரவியதும் இசக்கிப்பாண்டியின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் அங்கு 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும் நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார் அபினவ் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து உடலைக் கைப்பற்றி நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நான்கு வழிச்சாலையில் கொலை நடைபெற்ற இடம் இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இசக்கிப்பாண்டியின் உறவினர்கள் நான்கு வழிச்சாலையில் அமர்ந்து சாலைமறியல் செய்ய முயற்சி மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மறியல் முயற்சியை கைவிடச் செய்தனர்.
இதனிடையே ஊரின் மையப்பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தின் மாடியில் சந்தேகப்படும்படியான நபர் இருப்பதாக வந்த தகவலையடுத்து காவல் துறையினர் அங்கிருந்த நபரை பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஊர் பொதுமக்கள் அவரை தாக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து முறப்பநாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகின்றனர்.