தூத்துக்குடி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நெல்லை மண்டலத் தலைவர் திப்புசுல்தான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட பிப்ரவரி 17ஆம் தேதியில் தேசிய பாப்புலர் பிரண்ட் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடிவருகிறோம். அன்றைய தினத்தில் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஒற்றுமையைப் பறைசாற்றும்விதமாக ஒற்றுமை பேரணி, பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்திவருகிறது. விவசாயிகளுக்கு எதிரான வேளாண்மைச் சட்டம், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான குடியுரிமைச் சட்டம், புதிய கல்விக்கொள்கைத் திட்டம் போன்றவற்றை நிறைவேற்றியுள்ளது.
டெல்லியில் 60 நாள்களுக்கும் மேலாக அறவழியில் போராடிய விவசாயிகள் மீது மத்திய அரசு கடந்த காலங்களில் செய்ததுபோல், அரசே கலவரத்தை தூண்டிவிட்டு போராட்டத்தை நிறுத்த அறவழியில் போராடும் மக்கள் மீது வன்முறையை ஏவிவிட்டு அடக்குமுறையை கையாளுகிறது. காந்தியைச் சுட்டுக் கொன்ற ஆர்எஸ்எஸ் சிந்தனைவாதி கோட்சேயை நிரபராதி போன்று வரலாற்றை மாற்றி எழுத முயற்சி செய்துவருகின்றனர்.
அதைத் தடுப்பதற்காகவே அவரது நினைவுநாளான ஜனவரி 30ஆம் தேதி மெழுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அரசியல் கட்சி அல்ல சமூகம் சார்ந்த அமைப்பு. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிக்காது. பாஜகவை எதிர்க்கும் கட்சிக்கு ஆதரவு அளித்து பரப்புரை மேற்கொள்வோம்" என்றார்.
இதையும் படிங்க:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கைதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!