தூத்துக்குடி: இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 'விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 38) என்பவர், கடந்த 28ஆம் தேதி, அவருடைய மனைவி ஜெபமலரால் ரூ.3 லட்சத்துக்கு விற்கப்பட்ட 9 மாதக்குழந்தை அதிவீரமாறனை மீட்டுத்தரக்கோரி, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் குழந்தையின் தாய் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விற்கப்பட்ட குழந்தையை மீட்க உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையிலான தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்தநிலையில், குழந்தையை விற்க உதவிய இடைத்தரகர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தியதில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த மேலச்சூரங்குடியைச் சேர்ந்த செல்வமணி-ஸ்ரீதேவி தம்பதியினருக்கு குழந்தை அதிவீரமாறனை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து நாகர்கோவில் விரைந்த தனிப்படையினர் செல்வமணி-ஸ்ரீதேவி தம்பதியிடமிருந்து குழந்தையை மீட்டு, தூத்துக்குடி கொண்டு வந்தனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக செல்வமணி-ஸ்ரீதேவி தம்பதியினர் மற்றும் இடைத்தரகர் கார்த்திகேயன் ஆகிய 3 பேரை தனிப்படையினர் கைது செய்தனர்.
குழந்தையின் தாய் ஜெபமலரிடம் நடத்திய விசாரணையில், கருத்து வேறுபாடு காரணமாக தனது 2ஆவது கணவரை பிரிந்து தூத்துக்குடியில் தனது தாய், தந்தையருடன் வசித்து வந்த ஜெபமலர், மூன்றாவதாக மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளது தெரியவந்தது.