தூத்துக்குடி:திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் காரில் கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.25 கோடி மதிப்புள்ள அம்பர் கிரிஷை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே விலை உயர்ந்த பொருள் காரில் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் குலசேகரன்பட்டினம் போலீசார் உடன்குடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த காரை மறித்து சோதனை செய்ததில் காரில் மூன்று பிளாஸ்டிக் கவரில் திமிங்கலத்தின் எச்சம் அம்பர்கிரிஷ் (Ambergris) இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் அம்பர்கிரிஷை பறிமுதல் செய்து காரில் வந்த விருதுநகர் மாவட்டம், வடமலைக்குறிச்சி பகுதிய சேர்ந்த தங்கபாண்டி, ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்த கிங்ஸ்லி, சூலக்கரைப் பகுதியை சேர்ந்த மோகன், தூத்துக்குடி மாவட்டம் ஆசிர்வாதபுரத்தை சேர்ந்த ராஜன் மற்றும் வாகன ஓட்டுநர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி உள்ளிட்ட 6 பேரை பிடித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 கிலோ எடை கொண்ட இந்த அம்பர்கிரீசின் மதிப்பு சுமார் 25 கோடியாகும். இது வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த அம்பர்கிரிஷை குலசேகரன்பட்டினம் போலீசார், திருச்செந்தூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடந்த மாதம் உடன்குடியில் காரில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ எடையுள்ள அம்பர்கிரிஷை குலசேகரன்பட்டினம் போலீசார் பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஜக Vs திமுக.. தூத்துக்குடியில் நடக்கும் மல்லுக்கட்டு...