தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞர் கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் சிக்கினார்: காவல் ஆய்வாளரும் கைதாக வாய்ப்பு! - இளைஞர் கொலை வழக்கு

தூத்துக்குடி: தட்டார்மடம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கைதாக வாய்ப்புள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளைஞர் கொலை வழக்கில் காவல் ஆய்வாளரும் கைதாக வாய்ப்பு
இளைஞர் கொலை வழக்கில் காவல் ஆய்வாளரும் கைதாக வாய்ப்பு

By

Published : Sep 20, 2020, 2:01 AM IST

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகேவுள்ள சொக்கன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வன். இளைஞரான இவர் செப்.17ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இதற்கிடையில் தனது மகனை தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தூண்டுதலின்பேரில் அதிமுக கட்சி பிரமுகர் திருமணவேல் என்பவர் தான் கடத்தி கொலை செய்துவிட்டதாக செல்வத்தின் தாயார் எலிசபெத் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எலிசபெத் குடும்பத்தினருக்கும் திருமணவேல் குடும்பத்தினருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வருவதாகவும், திருமணவேல் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுடன் கைகோர்த்து தனது மகன்களான செல்வன், ராஜன், ராஜா ஆகிய மூன்று பேர் மீது பொய் வழக்கு பதிந்து சித்திரவதை செய்ததாகவும் எலிசபெத் தனது புகாரில் பதிவு செய்திருந்தார்.

மேலும் ஜாமினில் வெளியேவந்த தனது மகன்கள் காவல் ஆய்வாளர் நடவடிக்கை குறித்து மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டதன் விளைவாக அவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் ஹரிகிருஷ்ணன் திருமணவேலை தூண்டிவிட்டு தனது மகனை கொலை செய்துவிட்டதாக எலிசபெத் புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் மீது நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்பேரில் திசையன்விளை காவல் நிலையத்தில் உடனடியாக கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையறிந்த திருமணவேல் செப்.18ஆம் தேதி தலைமறைவான நிலையில், தற்போது அவரை திசையன்விளை காவல் ஆய்வாளர் ஷியாம் தலைமையிலான காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து தென்மண்டல சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார். உயிரிழந்த செல்வனின் உடல் உடற்கூறாய்வுக்காக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல் ஆய்வாளர் உள்பட அனைவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனும் இந்த வழக்கில் விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் உறவினர்கள் சம்மதத்துடன் நேற்று (செப். 19) பிற்பகல் 2.30 மணியளவில் உயிரிழந்த செல்வனின் உடல் உடற்கூறாய்வு செய்து முடிக்கப்பட்டது. உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மருத்துவர் ஸ்ரீதர் கீதாலட்சுமி தலைமையிலான குழுவினர் உடற்கூறாய்வு செய்தனர்.

இருப்பினும் காவல் ஆய்வாளரை கைதுசெய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளனர். அதனால், செல்வனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கேரள இளைஞர் கொலை வழக்கு: மூவருக்கு ஆயுள் தண்டனை!

ABOUT THE AUTHOR

...view details