தூத்துக்குடி: மாணவச் செல்வங்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களின் கல்வியறிவை மேம்படுத்தவும், போட்டித் தேர்வுகளை எழுதுபவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் விதமாகவும் தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை சார்பில் மாவட்ட தலைநகரில் இருந்து கிராமப்புறங்கள் வரை நூலகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நூலகங்கள் பலவற்றுக்கு சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டடத்திலும், சில நூலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறபோதிலும் அந்த கட்டடம் மிகவும் சேதமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்துவிழும் அபாயத்திலும் இயங்கி வருகிறது. ஆம், இந்த நிலை தான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம் கிராமத்தில் உள்ள நூலகத்திலும் நிகழ்ந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவைகுளம் கிராமத்தில் பேருந்து நிறுத்துமிடம் அருகே செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை ஊர்புற நூலகம், பஞ்சாயத்துக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வரும் இந்த நூலகம் 2004ல் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு இந்த கட்டிடத்தின் பின்புறம் அமைந்து வந்த இந்த நூலகம் போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் தற்போது இந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இப்பகுதியில் பெரும்பான்மை மக்கள் மீனவர்களே. இந்த நூலகத்தில் வரலாறு, இலக்கியம், நாவல்கள், தலைவர்களின் வரலாறு, வாழ்க்கையில் சிகரம் தொட்ட சாதனையாளர்களின் வரலாறு கட்டுரை, ஆன்மீகம், சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் வார, மாத இதழ்கள் மற்றும் நாளிதழ்களும் கிடைக்கின்றன.
தற்போது இந்த நூலக கட்டடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது பராமரிப்பு பணி செய்யாமல் அப்படியே விட்டுவிட்ட நிலையில், தற்போது நூலக கட்டிடம் மிகவும் சேதமடைந்து உள்ளது. கட்டடத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. கட்டட சுவர்களிலும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்ட நிலையில் உள்ளது.