தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கீழக்கரந்தையைச் சேர்ந்தவர் ராமர் மற்றும் அவரது நண்பர் திருமேனி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம்(ஜூலை 30) இரவு மது அருந்திவிட்டு, புதூர் பஜார் பகுதியில் உள்ள உணவகத்திற்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அங்கு குடிபோதையில் இருந்த இருவரும் பத்து ஆம்லேட்டுகளைச் சாப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து கடை உரிமையாளர் அதற்கான பணத்தை அவர்களிடம் கேட்டதற்கு ஐந்து ஆம்லேட் தான் சாப்பிட்டோம் எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பெண் கடை உரிமையாளரிடம் தகாத வார்த்தையில் பேசிய ராமர் மற்றும் திருமேனி ஆகிய இருவரும், வேறு சிலரை சம்பவ இடத்திற்கு வரச்சொல்லி செல்ஃபோன் மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கீழக்கரந்தை வடக்கு தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகன் மாரீஸ்வரன் (26), நடுத்தெருவைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் பிரவீன்ராஜ் (27) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். வந்த உடனேயே உணவகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்து சாலையில் இழுத்துப் போட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த உணவகத்தின் அருகே நின்று கொண்டிருந்த துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி (48), நல்லதம்பி (50), சரவணன் (45) ஆகியோர் தகராறில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர்.