தூத்துக்குடி: மதுரையில் நடைபெற இருக்கும் பொன்விழா எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் திண்டுகல் சீனிவாசன் பேசும்போது, “பெரிய ஜாதி தலைவர் என்று சொல்லுகின்ற டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூவை எதிர்த்து நின்று வாங்கி கட்டி கொண்டார். எப்படி அடிச்சாலும் அலுகமாட்டேங்கிறான் என்று வடிவேல் சொல்லுவதுபோல் இருக்கின்றது. இப்போது டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க போவதாக கூறுகின்றனர். எத்தனை கேவலப்பட்டாலும் வெளியே போக மாட்டேங்குறார்” என டிடிவி தினகரனை சாடினார்.
மேலும், “திமுகவின் பி டீமாக செயல்படும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சரியான பாடம் அதிமுக கற்று கொடுத்து வருகிறது. மகளிர் உரிமை தொகை திட்டம் அனைத்து பெண்களுக்கும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த நிலையில், தற்போது தகுதி உள்ள பெண்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என ஸ்டாலின் சொல்லியுள்ளது நமக்கு நன்மையே. இதனால் அனைத்து பெண்களும் அதிமுக பக்கம்தான் வருவார்கள்” என்றார்.