தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று காலை தூத்துக்குடி வந்தார். தனியார் ஹோட்டல் ஒன்றில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில், சிவந்தி ஆதித்தனாருக்கு அவருடைய சொந்த ஊரான வீரபாண்டிய பட்டணத்தில் தமிழக அரசு மணிமண்டபம் எழுப்பி, அதை வருகிற 22ஆம் தேதி திறக்கவுள்ளது வரவேற்கத்தக்கது. பத்திரிகைத் துறையிலும், விளையாட்டுத் துறையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி பல சாதனைகளை புரிந்த அவருக்கு மணிமண்டபம் அமைத்து அதன் திறப்பு விழாவில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பங்கேற்பது சிறப்புக்குரியது. இதை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை சட்டம் தொடர்பான சந்தேகங்களை மத்திய அரசு மேலும் மேலும் விளக்கிட வேண்டும். குடியுரிமை சட்டம் தொடர்பான இஸ்லாமிய மக்களின் போராட்டம் ஏற்புடையது என்றாலும், அவர்களின் நியாயமான சந்தேகங்களை கேட்டு அதை தீர்க்க வழி செய்திட வேண்டும். போராடவும், உரிமையை கேட்டு பெறவும் இஸ்லாமியர்களுக்கு இடமுள்ளது. அதேநேரத்தில் குடியுரிமை சட்டம் தொடர்பான சந்தேகங்கள் மீது வதந்திகளை சேர்த்து பரப்பி பிரச்னையை பெரிதாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிக்கக்கூடாது. சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசியல் ஆதாயத்திற்காக பிரிவினை ஏற்படுத்தும் வகையில் எதையும் செய்யக்கூடாது. ஆக்கப்பூர்வமான முறையில் இஸ்லாமிய மக்களின் உணர்வினை புரிந்துகொண்டு அவர்களின் சந்தேகத்தினை தீர்ப்பதற்கு வழி செய்யவேண்டும்.