தூத்துக்குடி:சுதந்திர வரலாற்றை சுமந்து நிற்கும் தூத்துக்குடி மாவட்டத்தில், செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்துள்ளது, மீனாட்சிபுரம் கிராமம்.
2000ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269. ஆனால், தற்போதைய மக்கள்தொகை எண்ணிக்கை ஒன்று தான். மற்றவர்களெல்லாம் எங்கு சென்றார்கள்? ஏன் மக்கள் ஊரை காலி செய்தார்கள்? தனியாக வசிக்கும் அந்த ஒற்றை மனிதர் யார்? கள நிலவரம் அறிய மீனாட்சிபுரத்தில் களம் கண்டது ஈடிவி பாரத்.
ஊர் வரவேற்பு
தூத்துக்குடியிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது மீனாட்சிபுரம். மீனாட்சிபுரத்துக்கு முன்னதாக இருக்கும் ஊர் செக்காரக்குடி. பொங்கல் பண்டிகைக்கு ரேக்ளா போட்டி நடத்தும் புகழ்பெற்ற ஊர்.
செக்காரக்குடி, மேல செக்காரக்குடி, நடுச்செக்காரக்குடி, கீழச்செக்காரக்குடி என நான்கு புறமும் பரந்து கிடக்கும் இந்த ஊரிலிருந்து மேற்கு நோக்கிப் பயணிக்கிறது, அந்த சாலை. மேல செக்காரக்குடியிலிருந்து சிறிது தொலைவிலேயே வலதுபுறத்தில் வடக்கு நோக்கிப் பாய் விரிக்கிறது, மீனாட்சிபுரம் சாலை.
வழியெங்கும் மானாவாரி பயிர்களுக்கு இடையே கிராமத்தின் வாசலை நோக்கி பயணித்தால் 3 கி.மீ. தொலைவில் அந்த பாலைத் தீவைக் காணலாம்.
உச்சி வெயில் உளியாய் இறங்கும் நேரத்தில் வந்து சேர்ந்தோம், மீனாட்சிபுரத்திற்கு. திரும்பும் திசையெங்கும் கைவிடப்பட்ட வீடுகள், காரைக்கட்டி வீடுகள், சுண்ணாம்பு வீடுகள், கூரை சாய்ப்பு, ஓட்டு சாய்ப்பு, அடுக்குத் தட்டு வீடுகள் என அடுத்தடுத்து அநாதையாகி கிடக்கிறது, அந்நிலம்.
அனைத்தும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடையே அத்துவிட்ட பட்டம் போல கயிறே இல்லாமல், காற்றில் ஊஞ்சலாடி கொண்டிருக்கின்றன. சிலவை காற்றின் தலைக்கோதலுக்காக தன் கூரையை தரையில் தாழ்த்திக்கிடக்கிறது. அடிக்கிற காற்றுக்கு அம்மியென்ன அதற்கும் ஒருபடி மேலாய் ஆட்டு உரலும் நகரும் போல. அதுவும் பொது தண்ணீர் குழாய் பக்கத்தில் பரிதவித்துக் கிடந்தது.
ஒற்றை மனிதருக்காக சுவாசிக்கும் நிலம்
குழந்தைகள் துள்ளித்திரிந்த கல்விச்சாலை தற்போது குளவிகளும், குண்டர்களும் தங்குமிடமென மாறியுள்ளது. இதுதான் அந்த ஊரை வரவேற்கும் முதல் எச்சங்கள்.
மக்கள் கூடிக்களித்த பொது தொலைக்காட்சி அறை, தொலைவிலிருந்து பார்த்தாலும் காட்சித்தரும் அறையாகத்தான் பெயருக்கு இன்னமும் இருக்கிறது. மொத்தத்தில் மக்கள் வாழ்ந்த நினைவுகளை அசைபோட்டபடி மவுனியாக நிற்கிறது, மீனாட்சிபுரம்.
ஆனாலும், எஞ்சியிருக்கும் ஒரு மனிதருக்காக இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கிறது, அந்த கரிசல் நிலம். ஆள் அரவமற்ற வீட்டு கூரைகளில் இளைப்பாற அமர்ந்திருந்த மயில்கள் 'றெக்கை' படபடக்க பறந்து போனது மட்டுமே இன்றைக்கும் அந்த கிராமத்தின் ரம்மியம் குறையாத காட்சிக்கு உயிர்ப்பூட்டியது.
ஊரின் முகப்பிலிருந்து வலது - இடதாய் பிரியும் இரு வழிகளில் வலதோரம் கடைசியில் உள்ள ஒரு வீடு மட்டும் மனிதர் வசிப்பதற்கான அடையாளங்களைக் கொண்டு நிற்கிறது. இந்த கிராமம் இன்னமும் வரைப்படத்தில் நிலைத்திருப்பதற்கு காரணகர்த்தா, அந்த மனிதர் தான்.
பரதேசி நாயக்கர்
அவர்தான் 70 வயதான கந்தசாமி என்ற பரதேசி நாயக்கர். தளர்ந்த நடை, காவி உடை என வயோதிக மாற்றத்தை ஏந்திய அந்த மனிதரே, அந்த ஊரின் மாமனிதர். வீட்டின் வாசலில் தண்ணீர் நிரப்பிய வாளி, தலையணையுடன் கூடிய கட்டில் படுக்கை, டிவி, மிக்ஸி, அவசரத் தேவைக்கு இருசக்கர வாகனம், ஆபத்துக்கோ, அடுப்பறைக்கோ ஒரு அரிவாள், இளமை கதை சொல்லும் ரேக்ளா வண்டி, அன்புக்கு நாய், ஆசைக்கு ஒரு பூனை என அந்த ராஜகுமாரனின் வீடு நம் கேமராவோடு நின்று பேசியது.
ஒற்றை ஆளாய் ஊர் காக்கும் காவல்காரன் கந்தசாமியிடம் பேசத் தொடங்கினோம், கிராமத்தின் நினைவுகளை ஏக்கம் கலந்த புன்முறுவலுடன் ஆரம்பித்தார் அவர். "சொந்தபந்தங்களோடு, சொத்து சுகங்களோடு, குழந்தைகள் சிரிப்பு சத்தத்தோடு, தினம் தினம் நிறைந்த பண்டிகையோடு இருந்த கிராமம்தான் இந்த மீனாட்சிபுரம்.
300 ஆண்டுகள் வரலாறு
சுமார், 300 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்தார்கள். என் தாத்தா, அப்பா, நான் உள்பட எல்லோருமே இந்தக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான். சுமார் 300 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்த கிராமம். 7 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட, இங்கு 5 குடும்பங்கள் இருந்தன.
ஆனால், இப்போதுதான் இந்த இடம் இப்படி மாறிவிட்டது. சண்டை, சந்தோஷம், துக்கம், விழா காட்சிகள் என சகலத்தையும் பார்த்த இந்த ஊர் இப்ப தனித்தீவாக மாறிக்கிடக்கிறது. மக்கள் எல்லோரும் ஊரைக் காலி செய்ததற்கு காரணம் தண்ணீர் பஞ்சமும், வேலைவாய்ப்பு இல்லாததுமே.
எங்கள் கிராமம் வானம் பார்த்த பூமி. மழையை நம்பிதான் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். விவசாயத்தையும், குடிநீரையும் மழை தண்ணீர்தான் பூர்த்தி செய்தது.
மழை பொய்த்தால், ஊர் பஞ்சம் ஆகிவிட்டது. 10 ஆண்டுக்கு முன் வரைக்கும் மழை ஓரளவு கைகொடுத்து எங்கள் வாழ்வாதாரம் பரவாயில்லாமல் இருந்தது.
பிறகு ஆண்டுக்கு ஆண்டு மழை குறைவானது. அதனால் விவசாயம் பொய்த்துப் போனது. குடிநீருக்காக இங்கிருந்து 5 கி.மீ. செக்காரக்குடிக்கும், சொக்கலிங்கபுரத்துக்கும் நடந்துசென்று நீரை சுமந்து கொண்டு வருவோம்.
பேருந்து வசதி கிடையாது. மக்கள் பஞ்சம், பட்டினின்னு ரொம்பவே கஷ்டப்பட்டார்கள்.
அதுதான் இங்கே இருந்து ஒவ்வொருவரும் ஊரை காலி செய்ய ஆரம்பித்தற்கான முதற் சம்பவம். சொந்த வீடு வாசல், விவசாய நிலம் எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு போனவர்கள்தான் இன்னமும் திரும்பி வரவே இல்லை. மழை பெய்து ஊர் செழிப்பானால் திரும்ப வந்திடலாம் என்ற நம்பிக்கையில் போனவர்கள்கூட இங்கே வராதது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
'சாகுற வரை இங்கதான் இருப்பேன்'
இப்போது 5 வருடமாக நான் மட்டும்தான் இந்த ஊரில் இருக்கிறேன். எனக்கு இந்த ஊரை விட்டுப் போக மனது வரவில்லை. நான் செத்தாலும் இந்த கிராமத்திலேயே வாழ்ந்து சாகணும்னு வைராக்கியத்துலதான் இங்கே இருந்து போகவில்லை.
தங்களோடு வந்து தங்கியிருங்கள். நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் என்று எனது மகள், மகன் உள்பட மருமகள்கள் எல்லாரும் கூப்பிட்டபோதும் இந்த கட்ட.... இந்த இடத்தை விட்டு எங்கேயும் நகராதென்று ஆணித்தரமாக சொல்லிவிட்டேன்.
பேரப்பிள்ளைகள் எல்லாம் என்னைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், அவர்களே வந்து என்னைப் பார்த்துச் செல்வார்கள். அதுதான் எனது சந்தோசம்.
எனக்கு எனது இளைய மகன் மாதம் ரூ.2,000 செலவுக்கு தந்து உதவுகிறான். அதை வைத்துத்தான் காலத்தை கடத்தி வருகிறேன். முன்னே இருந்தது போல இந்த ஊரை மக்கள் மனுசங்களோடு வாழனுமென்று மனசுக்குள் ஆசை பூத்துக்கிடக்கிறது.
ஆனால், இங்கிருந்து வேலைக்காக வெளியூர் போய் தங்கியிருந்து பிழைப்பு பார்த்தவர்கள் கூட தற்போது அங்கேயே வீடு, வாசல் வாங்கி தங்கிவிட்டதால் இங்கே வரவில்லை.