தூத்துக்குடி:ஆத்தூர் அருகே ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே, மேல ஆத்தூர், குச்சிகாடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இரவு 10 மணிக்கு வேலை முடிந்து தனது பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, தெற்கு ஆத்தூர் நரசன்விளை அருகே, திருச்செந்தூரில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து கவனக்குறைவாகவும், அதிவிரைவாகவும், பொருட்கள் வைக்கும் அறையின் கதவை திறந்து வைத்த நிலையிலும் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆம்னி பேருந்து இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்லும் பொழுது பேருந்தின் பொருட்கள் வைக்கும் அறையின் கதவு செந்தில் குமார் மீது இடித்ததாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த செந்தில்குமார் சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இருப்பினும் இதை அறியாமல் பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஆம்னி பேருந்து, இரு சக்கர வாகனத்தில் சென்ற, தெற்கு ஆத்தூரை சேர்ந்த சாகுல் ஹமீது (வயது 43) என்பவரை முந்தி செல்லும்போது, பொருட்கள் வைக்கும் அறையின் கதவு இடித்ததில் அவரும் பலத்த காயமடைந்தார். மேலும், நிற்காமல் சென்ற பேருந்து, நரசன் விளை தெற்கு தெருவை சேர்ந்த சுப்பையா (வயது 75) என்ற முதியவர் மீது மோதியது. இதில், முதியவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனைத்தொடர்ந்து, ஆத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த, மேல ஆத்தூர் குச்சிக்காடு பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (வயது 23) என்பவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து, பேருந்தை அப்பகுதி மக்கள் வழிமறித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த விபத்தில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரண்டு பேர் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆம்னி பேருந்தை ஓட்டி வந்த நாகன்னியாபுரத்தை சேர்ந்த மகேஷ் (வயது 30) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார். ஆம்னி பேருந்து விபத்தில் இரண்டு பேர் பலியாகி, இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பாஜகவை வீழ்த்த 'இந்தியா' கூட்டணி வகுத்துள்ள திட்டம் என்ன? - மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!