தூத்துக்குடிசெயின்ட் ஆன்ஸ் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து முடித்த கல்லூரி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா, செயின்ட் ஆன்ஸ் கல்லுரியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்கள்.
பின்னர் மாணவிகள் மத்தியில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ”ஒரு காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தை தவிர வேறு யாரும் கல்வி கற்க முடியாது. நிலம் வாங்க வேண்டும் என்றால் எல்லோரும் வாங்கி விட முடியாது. சனாதன தர்மத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்தியாவில் 8% இருந்தவர்களுக்கு தான் நிலம் சொந்தம், கல்வி சொந்தம், வேறு யாரும் கல்வி கற்க முடியாது. வேறு யாரும் நிலம் வாங்க முடியாது.
ஆகவே அந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1795ல் நிலம் வாங்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தனர். 1835ல் மெக்காலே பிரபு எல்லோரும் கல்வி கற்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தார். இதற்கு முன்னர் பஞ்சவர்கள் கல்வி கற்கலாம். சமஸ்கிருதத்தில் கல்வி கற்கலாம். சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் கல்வி கற்கலாம் என்றிருந்தது.
வரலாறு, பூகோளம் இது தான் பாடத்திட்டம். இதுதான் படிக்க வேண்டும் என்று சட்டமாக்கி நமக்கு எல்லாம் கல்வியை படிக்கலாம் என்று அனுமதி தந்தவர் மெக்காலே பிரபு. கள்ளக்குறிச்சியில் இப்போது கூட ஒரு குருகுலம் உள்ளது. அந்த குருகுலத்தில் அவர்கள் மட்டும் தான் கல்வி கற்க முடியும். நீங்களும், நாங்களும் கல்வி கற்க முடியாது.
எவ்வளவு கொடுமையான விஷயம், ஆனால் சனாதன தர்மம் தான் இந்த நாட்டை வளர்த்தது என்று சொல்லிக் கொள்வார்கள். மாணவர்கள் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். ஜாதியை சொல்லி நம்மை ஒதுக்கி தள்ளிவிட்டு அடிமையாக்கி நாம் எதுவும் உரிமை கோராமல் எதுவும் நமக்கு கிடையாது என்பதை உருவாக்கி அவர்களே கல்வி கற்க வேண்டும் என்று இந்த நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள்.