பேருந்தை வழிமறித்து நடத்துநர், ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள் தூத்துக்குடிபழைய பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று (செப். 7) இரவு 10 மணி அளவில் புறப்பட்டு சென்றது. நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்த சணல்குமார் ஓட்டுநராகவும், நாகர்கோவிலை சேர்ந்த தனசேகர், நடத்துநராகவும் இப்பேருந்தை இயக்கி உள்ளனர்.
பேருந்தை வழி மறித்து பயணம்:பேருந்தானது, தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது, மங்களகிரி விளக்கு பகுதியில் 10 பேர் கொண்ட கும்பல், பேருந்தை வழிமறித்து ஏறி உள்ளனர். அப்போது, அந்த நபர் படிக்கட்டில் பயணம் செய்த நிலையில், நடத்துநர் தனசேகர் அவரை உள்ளே வரும் படி கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரோ இருக்கையில் அமராமலும், பயண சீட்டு வாங்காமலும் பயணித்ததாக ஓட்டுநர் தெரிவித்து உள்ளார்.
நடத்துநர், ஓட்டுநர் மீது தாக்குதல்:அதன் பின், 500 மீட்டர் தொலைவில் உள்ள டோல் கேட் பகுதியில் பயணிகள் இருவரை இறக்கிவிடுவதற்காக பேருந்து நிறுத்தி உள்ளனர். அப்போது அந்த நபரும் இறங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் இறங்கியது நடத்துநருக்கு தெரியவில்லை என சொல்லப்படுகிறது.
பின்னர், டோல் கேட் அருகே 1 கிலோ மீட்டர் தூரம் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது 2 டுவீலரில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல், பேருந்தை நிறுத்தி நடத்துநர் மற்றும் ஓட்டுநரை சராமரியாக தாக்கி உள்ளனர்.
தகாத வார்த்தைகளை கூறி தாக்குதல்:இந்த சம்பவத்தை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர், அவரது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். மேலும் அந்த மர்ம கும்பல், "எங்கள் அண்ணனையா இறக்கி விட்டாய். இப்போது யாருக்கு வேண்டுமானாலும் கால் செய். எங்களை ஒன்றும் செய்ய முடியாது" என்று தகாத வார்த்தைகளால் கூறியபடியே சராமரியாக தாக்கி உள்ளனர். பேருந்தில் பயணித்த பயணிகள் இது குறித்து கேட்கும் போது, உங்களை குத்தி விடுவேன் என்று அந்த இளைஞர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதி:அதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த புதுக்கோட்டை போலீசார், காயமுற்ற நடத்துநர், ஓட்டுநர் ஆகியோரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஓட்டுநர் சணல் குமார் கூறுகையில், “நேற்று இரவு தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருக்கையில், புதுக்கோட்டை அருகே ஒரு இளைஞர் ஏறினார்.
போலீசார் தேடுதல் வேட்டை: அப்போது நடத்துநர் அவரை இருக்கையில் அமரும்படி கூறும் போது அவர் அமராமல் இருந்தார். பின்னர், திடீரென 7 பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து எங்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினர். பேருந்தையும் தாக்கி கண்ணாடியையும் உடைத்து, எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்" என்று கூறினார். குடிபோதையில் பேருந்து ஓட்டுநரையும், நடத்துநரையும் சரமாரியாக தாக்கிய அந்த கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தினால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஹாரன் அடித்ததால் ஆத்திரம்.. விரட்டிச் சென்று தாக்கிய கொடூரம்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!