"வறட்சியால் கருகிய பனை மரங்களை மீட்க நடவடிக்கை" - எம்பி கனிமொழி உறுதி! தூத்துக்குடி:தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி நேற்று (ஆக.24) நடைபெற்றது. இதை தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடக்கி வைத்தார்.
அதை தொடர்ந்து அங்கு காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பனைப் பொருட்கள், வாழை மற்றும் காய்கறி ரகங்களை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து பயிற்சி முகாமை தொடங்கி வைத்த கனிமொழி, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பெயரை வைத்துள்ள தமிழ்நாடு அரசுக்கும், தமிழநாடு முதலமைச்சருக்கும் தொகுதி மக்கள் சார்பிலும் எனது சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று பாரம்பரிய நெல் வகைகள் குறித்த கண்காட்சி மற்றும் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தேன். இந்த பயிற்சி முகாமில் சிறு தானிய வகைகளை மெருகூட்டி சந்தைப் படுத்துவதற்காக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முதலமைச்சரும் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அளித்திருக்கிறார்கள்.
பனை மற்றும் வாழை விவசாயத்திற்கான ஆராய்ச்சி நிலையம் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி தந்துள்ளார். பேய்குளம் பகுதிகளில் வறட்சியால் கருகி உள்ள லட்சக்கணக்கான பனை மரங்களை மீட்டெடுப்பதற்கு கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியோடு இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் தாலுகா பகுதிகளில் தீ விபத்துகளால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் வேளாண்மை துறையினர், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திமுக அமைச்சர்களுக்கு எதிராக வலுக்கும் சொத்து குவிப்பு வழக்குகள் - ஆர்.எஸ்.பாரதி அளித்த விளக்கம் என்ன?