தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை தொடக்கம் - அமைச்சர் விஜயபாஸ்கர் - தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

தூத்துக்குடி: கரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க வரும் திங்கள்கிழமை (ஜூலை20) முதல் பிளாஸ்மா சிகிச்சை தனிப்பிரிவு சென்னை ராஜீவ்காந்தி மருத்துமனையில் செயல்படுகிறது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை தொடக்கம்
கரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை தொடக்கம்

By

Published : Jul 18, 2020, 5:29 PM IST

தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பு குறித்தும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த சுகாராரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், மருத்துவமனை முதல்வர் ரேவதி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், மருத்துவத் தேவைகள் உள்ளிட்டவை குறித்து அமைச்சர்கள் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட டூவிபுரம் பகுதியில் உள்ள நோய்க் கட்டுப்பாட்டு மண்டலத்தில் எடுக்கப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள் குறித்தும் ஆலோசனை செய்தனர்.

கரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை தொடக்கம்

மேலும் கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகின்றனவா? சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறதா? என்பன குறித்தும் சுகாதார பணியாளர்கள் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகத்தை பார்வையிட்ட அமைச்சர்கள் தினம்தோறும் கரோனா பரிசோதனை வரும் ரத்தமாதிரிகள், பரிசோதனை முடிவுகள், மருத்துவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழ்நாடு முழுவதும் நோய்த்தொற்று தடுப்பு நடைமுறைகளை அரசு வேகமாக எடுத்து வருகிறது. காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 1405 பேர் முழுமையாக நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். 52 கர்ப்பிணிகள் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

கர்ப்பிணித் தாய்மார்களை பொருத்தவரை குழந்தை பிறப்பதற்கு பத்து தினங்களுக்கு முன்பே அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பாதிப்பு இருந்தால் முழு அளவில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தை பொறுத்தவரை 1094 படுக்கைகள் சிகிச்சைக்காக ஐந்து மருத்துவமனைகளில் உள்ளது. 240 படுக்கைகளில் ஆக்சிஜன் கொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வென்டிலேட்டர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறது.

நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா, அலோபதி மருத்துவர்கள் மூலம் ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நோய்த்தொற்றை குணப்படுத்த தேவையான மருந்துகள் இருப்பு உள்ளது. பி.சி.ஆர். கருவிகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள் மத்திய அரசு தரக்கூடிய பி.சி.ஆர். கருவிகளை மட்டுமே வைத்து சோதனை நடத்துகின்றனர்.

தமிழ்நாட்டை பொருத்தவரை 95 விழுக்காடு சொந்த நிதியிலிருந்து பி.சி.ஆர். கருவிகள் வரவழைக்கப்பட்டு இந்தியாவிலேயே அதிக அளவில் சோதனைகள் நடத்தப்படுகிறது. பிளாஸ்மா சிகிச்சையைப் பொறுத்த வரை இந்தியாவில் 44 மையங்கள் உள்ளன. சென்னையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 26 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 24 பேர் பூரண நலம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மதுரையில் நான்கு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நோய்த்தொற்றில் இருந்து விடுபட்டு பூரண நலம் அடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் அவர்கள் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தானம் தர முன்வரவேண்டும் என அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

வரும் திங்கட்கிழமை (ஜூலை20) முதல் பிளாஸ்மா சிகிச்சை தனிப்பிரிவு சென்னை ராஜீவ்காந்தி மருத்துமனையில் செயல்படத் தொடங்கும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது சவாலான நேரம் தரமான மருத்துவத்தோடு பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்தையும் முழு அளவில் கொடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் கரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ. 400 கோடி செலவு - மாநகராட்சி ஆணையர் தகவல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details