சென்னை:மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "கோயில்களை கொள்ளையடித்தும், பக்தர்களிடமிருந்து சுரண்டி பிழைக்கவும் திமுக அரசு தொடர்ந்து செய்து வரும் திட்டமிட்ட சதியின் ஒரு பகுதியே கோயில்களில் உயர்த்தப்பட்டுள்ள விலை நிர்ணயம். இந்துகளுக்கு விரோதமாக செயல்படும் திமுக அரசுக்கு மக்கள் வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இந்து சமய அறநிலையத் துறை உயர்த்தியுள்ள கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை பக்தர்களிடம் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
தமிழக அரசின் கட்டணம் பக்தர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பக்தர்களிடம் நேரிடியாக பணத்தை வாங்கிக்கொண்டு முறைகேடாக அதிகாரிகள் சிலர் அனுமதிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்ததுள்ளது. ஆனால் இது குறித்து காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டண விவகாரத்தில் ஏற்கெனவே நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட்டுள்ளது. இதனையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்டணக் கொள்ளையில் அறநிலையத்துறை ஈடுபடுவது சட்டவிரோத செயலாகும். ஆனால் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவோ, கட்டணக் கொள்ளையை மறைப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார்.
அதுமட்டுமின்றி திருச்செந்தூர் கோயிலில் அராஜகமான முறையில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டண தரிசனத்தை ரத்து செய்யாமல், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள செயல் வன்மையாக கண்டிக்கதக்கது.
இதற்கு பதிலடியாக திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்து சமய அறநிலையத் துறை உயர்த்தி உள்ள கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். எந்த வகையிலும் சுவாமி தரிசனம் செய்யக் கட்டணம் வசூலிக்கக் கூடாது" என்று அந்த அறிக்கையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சிக்கல் சிங்காரவேலவர் கோயில் தேரோட்ட விழா; முருகனின் திருமேனி வியர்வை சிந்தும் காட்சி!