தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஒன்றியம் இந்திரா நகர், அத்தைகொண்டான், சீனிவாச நகர் பகுதிகளுக்கு ரூ.22.45 லட்சம் மதிப்பில் குடிநீர் இணைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்பட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளின் தொடக்க நிகழ்ச்சிகளில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில்,"கடந்த பத்தாண்டுகளாக அதிமுக அரசின் சாதனைகளை சொல்லி நாங்கள் மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறோம். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்கிற பயம் திமுகவுக்கு உள்ளது.
எனவேதான் தோல்வி பயத்தில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது பரப்புரைகளில் அதிமுகவை தாக்கிப் பேசி வருகின்றனர். நாங்கள் மக்களுக்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துக்கூறி பாசிட்டிவாக ஓட்டு கேட்கிறோம். அவர்கள் நெகட்டிவாக பேசி ஓட்டு கேட்கிறார்கள். மக்கள் எப்போதுமே பாசிட்டிவ் கருத்துக்கு மட்டுமே ஆதரவு தருவார்கள், ஓட்டு போடுவார்கள் என்பது கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் வரலாறாக உள்ளது.
எதிர்காலத்திலும் அதுதான் நிகழும். அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திமுகவினர் தங்கள் காலத்தில் நிறைவேற்றப்பட்டதாக பொய் பரப்புரை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி எம்.பி. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவில்பட்டி தொகுதிக்கு என்ன செய்துள்ளார்.
தீப்பெட்டி தொழிலுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கை அவர்கள் செய்ய வேண்டிய வேலை. அதை நான் செய்து முடித்து தந்துள்ளேன். அந்தப் பணியைகூட அவர்கள் செய்யவில்லை. எங்களைப் பார்த்து பொத்தாம் பொதுவாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். தேர்தலுக்காக திமுகவினர் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்.