தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஒன்றியத்துக்கு உள்பட்ட கம்மாப்பட்டி, திருமங்கலக்குறிச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
இதையடுத்து, வெள்ளாளங்கோட்டையில் ரூ.33 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் அடிக்கல் நாட்டுதல், ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். இதேபோன்று ரூ.14.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தையும் திறந்து வைத்தார். ரூ.9.04 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் தொடக்கி வைத்து, ஆவுடையம்மாள்புரம், ராமநாதபுரம் பட்டியூர் அம்மா நகரும் நியாய விலைக்கடையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாச்சியர் பாஸ்கரன், அலுவலர் சுபாஷினி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கணேசன், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், கயத்தார் ஒன்றிய செயலாளர் வினோ பாலாஜி, அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். பரப்புரைக்கு செல்லும் இடங்களில் மற்ற தலைவர்களை போல் செட்அப் செய்வது கிடையாது. இது ரீல் இல்லை ரியல் என்று நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். அவர்கள் பரப்புரை ரீலாக உள்ளது. முதலமைச்சரின் பரப்புரை ரியலாக இருக்கிறது.
திமுக சுயமாக சிந்திப்பது இல்லை. பிரஷாந்த் கிஷோர் திமுகவை இயக்குகிறார். அவர்களுக்கு மக்களை சந்திக்கின்ற சக்தி இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது கட்சியினரை சந்திப்பது கிடையாது. ஆனால், முதலமைச்சர் அப்படி அல்ல. சாதாரண தொண்டர்களும் அவரை எளிதாக சந்திக்கலாம். அது தான் மக்கள் இயக்கம்.
இது தான் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் உள்ள வேறுபாடு. எங்களை யாரும் இயக்க முடியாது. பாஜக இயக்குகிறது என எங்களை அவர் கூறுகிறார். உண்மையில் இப்போது யார் யாரை இயக்குகிறார்கள் என்பது புரியும். எதிர்கட்சியாக இருக்கும்போதே அவர்களை இயக்க ஆள் தேவை. நாங்கள் ஆளும் பொறுப்பில் சுயமாக இயங்குகின்றோம்.
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துள்ளோம். அதனால் தான் மத்திய அரசு மூலம் எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முடிந்தது. இதுவரை 640 பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து விலக்கு வாங்கி கொடுத்துள்ளோம். வரி விதிப்பையும் குறைத்து பெற்றுத் தந்துள்ளோம். இதற்காக பாஜகவின் அடிமை ஆட்சி என அவர் கூறுகிறார். கொள்கை வேறு, அரசு இணக்கம் என்பது வேறு.